கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கே.பி.ஆர் தொழில்நுட்பக் கல்லூரியில் காலநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கம் குறித்த கருத்தரங்க நிகழ்ச்சி இன்று (நவம்பர் 30) நடைபெற்றது. இதில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே காலநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கம் குறித்து பேசினார்.
இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரமணன் கூறுகையில், “காலநிலை மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 30 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது நகரப் பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளது”.
காலநிலையை கட்டுபடுத்த வேண்டும்:
“காலநிலை மாற்றத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வனப் பகுதிகளாக இருந்த இடங்களில் அதிக அளவில் கட்டிடங்கள் வந்துவிட்டதால் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது”.
அன்றாட நிகழ்வில் கவனம் செலுத்துங்கள்:
“வெப்பநிலை அதிகரிப்பதற்கு நகரமயமாக்கல் பிரதானமான காரணமாகும். கட்டிடங்களுக்கு வெள்ளை பூச்சு கொடுப்பது, மாடி தோட்டங்களை அமைப்பது, ஏசி பயன்பாட்டை குறைத்துக் கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் வெப்பநிலையை ஓரளவு கட்டுக்குள் வைக்க முடியும். காலநிலை மாற்றத்தை சீராக்க அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும், கட்டிட வளாகங்களுக்குள் நீர் நிலைகளுக்கான அமைப்பை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, ஃபெஞ்சல்புயல் குறித்து வல்லுநர்களின் கணிப்புகள் பொய்த்துப் போனது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், “வானிலையை பொறுத்தவரை கணிப்புகளில் ஏற்படும் மாற்றங்களை இயற்கை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். வானிலை ஆய்வு மையம் தற்போதைய நிலை குறித்து சொல்வது மட்டும்தான் சரியான தகவலாக இருக்கும். தனிநபர் எண்ணத்தை வெளிப்படுத்தினால் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுவிடும்”.