சென்னை:வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரால் கடந்த மார்ச் மாதம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், கடந்த மாதம் 26 ஆம் தேதி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில், ஜாபர் சாதிக்கை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறை மாற்று வாரண்ட் கோரி அமலாக்கத்துறை கடந்த மாதம் மனுத் தாக்கல் செய்தது. பின்னர், சிறை மாற்று வாரண்ட் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த சிறை மாற்று வாரண்ட மூலமாக மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஜாபர் சாதிக் இன்று (ஜூலை 15) ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், ஜாபர் சாதிக்கை கைது செய்வதற்கான உத்தரவும், 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரியும் அமலாக்கத்துறை தரப்பில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஜாபர் சாதிக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி, ''சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் 24 மணி நேரத்தில் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. மேலும், போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே ஜாமீன் பெற்று விட்டார்.
இந்த நிலையில், ஜாபர் சாதிக் சிறை வாரண்ட் மூலமாக மீண்டும் கைது செய்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. இது சட்ட விரோதமானது. எனவே, அவருடைய கைதுக்கு அனுமதிக்க கூடாது. இந்த கைது சட்டவிரோதமானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மேலும், நீதிமன்றக் காவலுக்கு உற்படுத்தக்கூடாது'' என வாதிட்டார்.