சென்னை:சென்னை மெரினாவில் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள லூப் சாலையில், அக்டோபர் 20 ஆம் தேதி இரவு 12 மணிக்கு சந்தேகத்திற்கிடமாக இருவர் காருடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து வந்த மயிலாப்பூர் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர் சிலம்பரசன் காரை எடுத்துக் கிளம்புமாறு அவர்களை அறிவுறுத்தினார். சந்திரமோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் வாகனத்தை எடுக்க மறுத்ததுடன் காவல் துறையினரை ஆபாசமாக பேசினர். இது குறித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மயிலாப்பூர் போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட, சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.