தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான தகவல்களை பொதுவெளியில் வெளியிட இயலாது" - சென்னை மாநகர காவல் ஆணையர் - private school bomb threat

Chennai Bomb threat issue: சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு விடுத்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும், அது குறித்து தகவல்களை பொதுவெளியில் வெளியிட இயலாது என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Chennai Bomb Threat Issue
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 4:42 PM IST

Updated : Feb 10, 2024, 6:35 AM IST

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள வித்யோதயா பள்ளியில், பள்ளி பாதுகாப்பு பகுதி என்கிற புதிய திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (பிப்.9) துவங்கி வைத்தார். மேலும், பள்ளி பாதுகாப்பு பகுதி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களுக்கு உபகரணங்களை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சந்தீப் ராய் ரத்தோர், “பள்ளி பாதுகாப்பு பகுதி என்கிற புதிய திட்டத்தை இன்று தொடங்கியுள்ளோம். காலை மற்றும் மாலை வேலைகளில், பள்ளிக்கு வெளியே மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஏற்கனவே போக்குவரத்து காவல்துறை, பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்புப் படை ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உதவியுடன் அவர்களையும் தன்னார்வலர்களாக இணைத்து, இந்த திட்டத்தை இன்று நான்கு பள்ளியில் தொடங்கி உள்ளோம். இந்த திட்டத்தில் 400 பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம். பயிற்சி பெற்றவர்கள் சென்னை முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள பெற்றோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர்.

சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரையில் சாலை விபத்துகளில் உயிர் இழப்பவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டு இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், இந்த எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் இத்திட்டம் உதவியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து, "பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்து, முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. மிரட்டல் தொடர்பாக யாரும் தேவையில்லாத பதற்றமடைய வேண்டாம். இந்த மிரட்டலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விரைவில் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வழக்கு விசாரணை தொடர்பாக விரிவான தகவல்களை பொது வெளியில் அறிவிக்க முடியாது. வழக்கமாக இது போன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் பழைய குற்றவாளிகளின் தகவல்களைச் சேகரித்து, அவர்கள் யாரேனும் இதில் ஈடுபட்டுள்ளார்களா என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த வெடிகுண்டு மிரட்டலில் ஈடுபட்ட நபர், ஏற்கனவே உள்ள பட்டியலில் இல்லை. புதிதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதன் மூலம் பெற்றோருக்கும், பொதுமக்களுக்கும் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்களுக்கு யாரும் பயப்படத் தேவையில்லை என கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க:சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் சஸ்பெண்ட் - உயர் கல்வித்துறை நடவடிக்கை!

Last Updated : Feb 10, 2024, 6:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details