சென்னை:சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை குழு தயாரிப்பில் முக்கிய பொறுப்பில் உள்ள நிலையில், வேலூரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்திற்குச் சென்று விட்டு, நேற்று இரவு (பிப்.23) காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னீர்குப்பம் மேம்பாலத்தில் வந்தபோது, முன்னால் சென்ற கார் திடீரென நின்றுள்ளது.
அப்போது வேகமாக வந்த பிரியாவின் காரில் பிரேக் போட்டதால், பின்னால் வேகமாக வந்த லாரி அவரது காரின் பின் பக்கம் மோதி உள்ளது. இதில் முன்னால் சென்ற காரின் மீது பிரியாவின் கார் மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் பிரியா சென்ற காரின் முன் மற்றும் பின் பகுதிகள் நொறுங்கி சேதமடைந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மேயர் பிரியா அலறியபடி சத்தமிட்டதைத் தொடர்ந்து, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, மேயர் பிரியாவை காரில் இருந்து மீட்டுள்ளனர்.