சென்னை:சென்னையில் மணலி மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கியாஸ் நிறுவனத்தில் நேற்று (பிப்.15) நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், சிலிண்டர் வெடித்து அலுவலக அறை முழுவதும் கரும் புகை முட்டமாக காட்சியளித்துள்ளது. இந்த நிலையில், ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள மணலியில் மாநகராட்சிக்கு சொந்தமாக பயோ கியாஸ் நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு சென்னை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் இருந்தும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, திடக்கழிவுகள் மூலம் பயோ கேஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கரன் மற்றும் சுதாகர் ஆகிய இருவரும் மெஷின் ஆபரேட்டர்களாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று (பிப்.15) இரவு பணி முடிந்து இருவரும் வீட்டிற்கு திரும்புவதற்கு முன் மெஷின்களை ஆஃப் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென மெஷின் வெடித்து கேஸ் பரவியுள்ளது. இதனால், அறை முழுவதும் தீ பரவியதைத் தொடர்ந்து, திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த வாயு கசிவை ஊழியர்கள் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக அலுவலகத்தின் மேற்சுவர் வெடித்து விழுந்துள்ளது. அந்த விபத்தில் ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்த விரைந்து வந்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர் மற்றும் தீயணைப்பு துறையினர், இடிப்பாடுகளுக்குள் சிக்கிய ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.