சென்னை:சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாயும், பிற நகரங்களில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் நல நிதிச் சட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமல்படுத்தும்படி உத்தரவிடக் கோரி புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஃபரிதா பேகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி குமரப்பன் அடங்கிய அமர்வு, வழக்கறிஞர்கள் நல நிதிய திட்டத்தின்கீழ் வழங்கப்படும் தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், புதுச்சேரி அரசு மற்றும் புதுச்சேரி – காரைக்கால் வழக்கறிஞர்கள் சங்கங்களுடன் இணைந்து கலந்தாலோசித்து கருத்துருக்களை இறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.