சென்னை: மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கடைபிடிக்க கொண்டாடப்படும் இந்த மாவீரர் ஜெயந்தி, இந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி (நாளை) வருகிறது. இந்த நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உத்தரவின்படி நாளை இறைச்சி கடைகள் மூடப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் நாளை அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.
இதேபோல், ஜெயின் கோயில்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டு, இறைச்சி விற்பனை செய்யப்படுவதும் தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே, இந்த உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.