தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டினப்பாக்கத்தில் கட்டப்படும் புதிய மீன் அங்காடிக்கு கூடுதலாக ரூ.4.96 கோடி ஒதுக்கீடு - சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!

Chennai Corporation Meeting: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் எந்தெந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது குறித்து விளக்கம் வேண்டும் என நேற்று (ஜன.31) நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Chennai Corporation meeting decided to allocate additional funds for Pattinapakkam fish market
சென்னை மாநகராட்சி மாதாந்திர கூட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 9:51 AM IST

சென்னை: சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று (ஜன.31) நடைபெற்றது. இதில் துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இதில், மாமன்ற உறுப்பினர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கூறியதாவது, வடசென்னைப் பகுதியில் அத்தியாவசியப் பணிகள் செய்யக் கோரிக்கை வைத்தால் கூட வடசென்னை வளர்ச்சி நிதித் திட்டத்தின் கீழ் செய்யப்படும்" என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வடசென்னை வளர்ச்சி நிதித் திட்டத்தில் எந்தெந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

மாநகராட்சி ஸ்பான்ஜ் பூங்காக்கள் சரியாகப் பராமரிக்கப்படாததால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் முக்கியச் சாலைகளில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும்.

பெருநிறுவனங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு வழங்கும் பொது பங்களிப்பு நிதியை அந்தந்தப் பகுதியின் மேம்பாட்டுப் பணிக்குப் பயன்படுத்தச் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் மாநகராட்சியின் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

மேலும், நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம், குடிநீர் வாரியம் செய்யும் தவறுகளுக்கு மாமன்ற உறுப்பினர்கள் தான் பதில் சொல்லவேண்டியுள்ளது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கச் செல்ல முடியாத நிலையுள்ளது. இதற்குத் தேர்தலுக்கு முன்பாக தீர்வு காண வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தனர்.

மேயர் ஆர்.பிரியா பேசுகையில், "வடசென்னை வளர்ச்சி திட்டப் பணிகளைச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மேற்கொள்கிறது. இதற்கு மாநகராட்சி, குடிநீர் வாரியம் சார்பில் கோரிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன.

தூய்மைப் பணியில் தவறாக வயதைக் குறிப்பிட்டு பணியாற்றுபவர்களுக்கு பணி ஓய்வு வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் பங்களிப்பு நிதியை அந்தந்தப் பகுதியில் செலவிடுவதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

துணை மேயர் மகேஷ் குமார் பேசுகையில், “பேரிடர் காலங்களில் மாநகராட்சிப் பணிகளை உடனுக்குடன் செயல்படுத்துவதில் தகவல் தொடர்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. மாநகராட்சியின் களப்பணியில் முதல்கட்டமாக அந்த பகுதியில் மாமன்ற உறுப்பினர்கள் தான் உள்ளனர். இந்நிலையில் மாநகராட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்த மாமன்ற உறுப்பினர்களுக்கு "வாக்கி டாக்கி' வழங்க வேண்டும்” என்றார்.

ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், “சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், எதிர்வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கவுள்ள நிலையில் மாமன்ற உறுப்பினர்கள் சென்னை மாநகராட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கருத்துகளை தெரிவிக்கலாம்” என்றார்.

34 தீர்மானம் நிறைவேற்றம்:சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்றக் கூட்டத்தில் 35 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 18வது தீர்மானத்துக்கு மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இதையடுத்து அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டு 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.522லிருந்து, ரூ.687ஆக உயர்த்துவது, மாநகராட்சி விளையாட்டுத் திடல்களைப் பராமரிக்க இணையவழி ஒப்பந்தம் விடுவது, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் புதிதாகக் கட்டப்படும் மீன் அங்காடியில் கூடுதல் பணிகள் மேற்கொள்ள ரூ.4.96 கோடி ஒதுக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திமுகவைப் போல் பாஜக ஊழல் கட்சி இல்லை..! திருப்பத்தூரில் அண்ணாமலை பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details