சென்னை:சென்னை மாநகராட்சியின் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா இன்று (பிப்.21) தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை இத்தொகுப்பில் காணலாம்.
- மாணவர்களின் சுற்றுலாவுக்கு ரூ.47.25 லட்சம் நிதி: 2024-25ஆம் கல்வியாண்டில் சென்னை மாநகராட்சியில் உள்ள 208 தொடக்கபள்ளி மற்றும் 130 நடுநிலை பள்ளியில் பயிலும் 24 ஆயிரத்து 700 மாணவர்களை, சென்னையை சுற்றியுள்ள கிண்டி சிறுவர் பூங்கா, பிரில்லா கோளரங்கம், எழும்பூர் அருங்காட்சியகம், வண்டலூர் உயிரியர் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல 47.25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
- பள்ளிகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ7.64 கோடி: பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, 2024 - 2025ம் கல்வியாண்டில் 117 தொடக்கப் பள்ளிகள் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட மண்டலங்களான 1,2,3,7,11,12,14,15 ஆகியவற்றிலிருந்து இணைக்கப்பட்ட பள்ளிகளும் சேர்த்து மொத்தம் 255 பள்ளிகளுக்கு தலா 4 கேமராக்கள் வீதம் 7.64 கோடி மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.
- மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க ரூ.3.59 கோடி: 208 தொடக்க மற்றும் 130 நடுநிலைப் பள்ளிகளில் LKG வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 64 ஆயிரத்து 22 மாணவர்களுக்கு 3.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல் முறையாக 1 செட் ஷூ (Shoe) மற்றும் 2 செட் சாக்ஸ் (Socks) வழங்கப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
- பெண்களுக்கு ஜிம் அமைக்க ரூ.10 கோடி: சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு ஒன்று என்ற விதத்தில், 200 வார்டுகளில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெண்களுக்கென EMPOWHER உடற்பயிற்சி கூடம் அமைக்கபடும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
- பள்ளி மாணவர்களுக்கு ஐடி கார்ட் வழங்க ரூ.61 இலட்சம்:2024-2025 ஆம் கல்வியாண்டில் மொத்தம் 419 சென்னைப் பள்ளிகளில் பயிலும் 1 இலட்சத்து 20 ஆயிரத்து 175 மாணவர்களுக்கு தன் விவரக்குறிப்பினை அறிந்து கொள்ளவும், பாதுகாப்பிற்காகவும் வண்ண அடையாள அட்டை வழங்க (ID Card) 61.00 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
- பொது வெளியில் திரியும் கால்நடைகளை பிடிக்க தற்காலிக பணியாளர்கள்: ஒரு மண்டலத்திற்கு 5 பேர் விதம் 1,2,3,4,7,11,14,15, ஆகிய மண்டலங்களில் பொது வெளியில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க தற்காலிக பணியாளர்களாக மொத்தம் 45 நபர்கள் பணியமர்த்தபடுவார்கள். இதற்காக ஆண்டிற்கு 1.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
- தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த ரூ.3 கோடி: பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும், தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மேயர் பிரியா தகவல்.
- தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.70 இலட்சம் நிதி:சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய 70 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.