சென்னை: நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘டீன்ஸ்’ என்ற திரைப்படத்தில் கிராபிக்ஸ் பணியாளராக கோவையைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர் பணிபுரிந்திருக்கிறார். இருவருக்கும் இடையேயான ஒப்பந்தப்படி, கடந்த பிப்ரவரி மாதமே கிராபிக்ஸ் பணிகளை முடிக்க வேண்டும் எனவும், அதற்கு ஊதியமாக 68 லட்சத்து 50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் தவனையாக 42 லட்சம் கொடுத்த பார்த்திபன், சிவபிரசாத் ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்காததால் முழுத் தொகையும் கொடுக்காமல் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சிவபிரசாத் மீது கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் பார்த்திபன் கொடுத்த புகார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தனக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தும் வரை 'டீன்ஸ்' திரைப்படம் வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சிவபிரசாத் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ஒப்பந்தத்தின் போது பேசியதை விட அதிக கிராபிக்ஸ் வேலைகள் கொடுத்ததாலேயே குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகள் முடிக்க காலதாமதம் ஏற்பட்டதாகவும், தனக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 51 லட்சம் கொடுக்கும் வரை 'டீன்ஸ்' திரைப்படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக ஜூலை 18ஆம் தேதிக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய நடிகர் பார்த்திபனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:கோவை கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் புகார்.. 'டீன்ஸ்' பட ரிலீஸுக்கு பாதிப்பா?