சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு நேற்று (அக்டோபர் 29) மாலை வந்த மின்னஞ்சலில் இலங்கை, மும்பை, பெங்களூர், சிலிகுரி, டெல்லி, கொல்கத்தா உள்பட 8 ஏர் இந்தியா விமானங்களுக்கும், கோவா, புனே, ஹைதராபாத் ஆகிய 3 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும் என மொத்தம் 11 சென்னை வருகை விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பு அலுவலர்கள், மோப்ப நாய்களுடன் தீவிரமாக சோதனைகளில் ஈடுபட்டனர். ஒவ்வொரு விமானங்கள், சென்னையில் வந்து தரை இறங்கியதும் பயணிகள் அனைவரும் விமானங்களில் இருந்து கீழே இறங்கிய பின்பு பாதுகாப்பு அலுவலர்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் கண்ணிமை மாறாது சோதனை மேற்கொண்டனர்.
ஆனால், சோதனைக்குப்பின் எந்த விமானங்களிலும் வெடிகுண்டுகள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்வது வாடிக்கையாகியுள்ளது.