கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராம்நகர் பகுதியில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளர் C.நரசிம்மனை ஆதரித்து பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
அப்போது, "மழைக்கால, குளிர்கால பறவை போல மோடி வருவதாக முதல்வர் விமர்சிக்கிறார். அந்த வார்த்தையே தவறு. இந்திய நாட்டில் யார் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஒவ்வொருமுறையும் தமிழ்நாட்டிற்குப் பிரதமர் வரும் போதும் பல கோடி ரூபாய் மதிப்பில் ஆன திட்டங்களைக் கொடுத்துச் செல்கிறார். தொழில்களை அவர் கொடுத்துச் சென்றால் கமிஷன் பெறுவதற்காக இவர்கள் வருகிறார்கள்.
குடிப் பழக்கத்தால் ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதைப் பார்க்கிறோம். குடிப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் வேலை கொடுத்து அவர்களது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற செயலை செய்தால், இவர்கள் அவர்களது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகப் போதைப் பொருளை இறக்குமதி செய்து இளைஞர்களை அடிமையாக்கும் இந்த குடும்பத்தை மீண்டும் ஒருமுறை கூட தேர்ந்தெடுக்கக் கூடாது.