சென்னை: பட்ஜெட் 2024- 2025ஆம் ஆண்டிற்கான சிறப்பம்சங்களை பற்றி தமிழக பாஜக சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமையில் இந்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தொழில் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், தங்க முதலீட்டாளர்கள், பொருளாதார வல்லுநர்களும் பங்கேற்றனர். பட்ஜெட்டில் உள்ள சந்தேகங்களை மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் நிவர்த்தி செய்தார்.
இதையடுத்து மேடையில் பேசிய அமைச்சர், "தகவல் தொழில்நுட்ப காலத்தில் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் எதையும் சொல்லவில்லை. அனைத்து தகவல்களையும் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இந்த பட்ஜெட் எதிர்கால முன்னேற்றத்திற்கான பட்ஜெட். கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை, புதுமைகளை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். இந்த பட்ஜெட்டில் Start-upக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. Start-ups நன்மையை கொடுக்கும்.
பெண்கள் முன்னேற்றம், பங்களிப்பை அதிகப்படுத்த பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முத்ரா லோன் வரம்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இது சிறு, குறு தொழில்துறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. தமிழக அரசு பயன்படுத்திக் கொள்வதில்லை.
தமிழகத்திற்கான ரயில் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழக ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதை விட 8 மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 6 வந்தே பாரத் ரயில்கள் விடப்பட்டுள்ளது. எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள்? மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு வந்தே பாரத் ரயில்கள் அதிகம்.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு நிறைய திட்டங்களையும், நிதிகளையும் கொடுக்கிறார். ஆனால் நீங்கள் (திமுக) வடக்கு, தெற்கு என பிரிவினையை ஏற்படுத்துகிறீர்கள். யார் யாருக்காக போராட்டம் நடத்துகிறார்கள்? 5 பசுமை வழிச் சாலைகள் தமிழகத்தில் இருக்கிறது.
திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் கூட இவ்வளவு நிதி, திட்டங்கள் கிடைக்காது. பல்வேறு திட்டங்களில் மற்ற மாநிலங்களுக்கு கிடைக்கும் சராசரியை விட தமிழகத்திற்கு அதிகம் நிதி பங்களிப்பு கிடைக்கிறது. யாருக்காக எதற்காக போராட்டம்? காங்கிரஸ் இது எங்கள் பட்ஜெட் என்கிறார்கள். அப்படி இருக்க, ஏன் விமர்சிக்க வேண்டும்?