சென்னை:"செறிவூட்டப்பட்ட அரிசியை, தலசீமியா எனப்படும், மரபணு சார்ந்த ரத்த சோகை போன்ற உடல் நல குறைபாடு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது" என்ற விழிப்புணர்வு வாசகத்தை நீக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக பூவுலகின் நண்பர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட உணவுகளின் பையில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகத்தை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுகளின் செறிவூட்டல்) ஒழுங்குமுறைகள், 2018ல் திருத்தங்களை மேற்கொள்ள பொதுமக்களின் கருத்துக்களைக்கோரி ஒரு அறிவிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுகளின் செறிவூட்டல்) ஒழுங்குமுறைகள், 2018ன் படி "தலசீமீயா (Thalassemia) பாதிப்பு உடையவர்கள் மருத்துவ மேற்பார்வையில் இரும்புச்சத்தால் செறிவூட்டப்பட்ட உணவை உட்கொள்ளலாம், சிக்கில் செல் அனிமீயா(Sickle Cell Anaemia ) பாதிப்பு இருப்பவர்கள் இரும்புச்சத்தால் செறிவூட்டப்பட்ட உணவை உட்கொள்ளக்கூடாது" எனும் எச்சரிக்கை வாசகத்தை செறிவூட்டப்பட்ட உணவு விநியோகம் செய்யும் பைகளில் அச்சிட்டிருப்பது அவசியம்.
ஆனால், மேற்கூறியவாறு தமிழ்நாட்டில் இச்செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படவில்லை. ஏற்கெனவே தலசீமியா, சிக்கில் செல் அனிமீயாவால் பாதிக்கப்பட்டோர் இந்த செறிவூட்டப்பட்ட உணவை உட்கொள்வதால் அவர்களுக்கு வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பதால் இந்த எச்சரிக்கை வாசகத்தை அச்சிடுவது மிகவும் அவசியமாகும்.
எந்த எச்சரிக்கை வாசகமும் இல்லாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படுவது தவறு எனக்கூறி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2023ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.