சென்னை: இலங்கையின் தமிழர்கள் வாழும் நிலப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒருங்கிணைத்து "தமிழீழம்" என்ற தனிநாட்டை பெறுவதற்காக 1976ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். இந்தியாவில் 1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இயக்கத்தின் மீதான தடை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில், கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்தது. தமிழக அரசும் இது தொடர்பாக அறிக்கையை கடந்த ஜூன் 18ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிப்பு குறித்த அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "விடுதலைப் புலிகள் இயக்கம் மக்களிடையே பிரிவினைவாதத்தை வளர்க்கிறது. இந்தியாவில் - தமிழ்நாட்டில் தங்களது ஆதரவு தளத்தை வலுப்படுத்துகிறது. ஆகையால் சட்டவிரோதச் செயல்கள் (தடுப்பு) சட்டம் 1967-ன் பிரிவு 3-ன் உட்பிரிவு 1, 3 ஆகியவற்றைப் பயன்படுத்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கமானது இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து மீண்டும் எழுச்சி பெறச் செய்யக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இந்த குழுக்கள் பிரிவினைவாதத்தை வலுப்படுத்துகின்றன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனைத்து தமிழருக்குமான தனிநாடு (அகன்ற தனித் தமிழ்நாடு) என்ற கோட்பாடு இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாகும். இந்தியாவின் ஒரு பகுதியை இந்தியாவில் இருந்து பிரிப்பதற்கான நடவடிக்கையாகும். ஆகையால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, மத்திய அரசின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயமானது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், "இந்தியாவில் உங்கள் இயக்கத்தை ஏன் சட்டவிரோதமாக அமைப்பாக பிரகடனம் செய்து தடை செய்யக்கூடாது என்பதை விளக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக அதிமுக நிர்வாகி கைது!