சென்னை: நாடு முழுவதும் சிபிஎஸ்இ (CBSE - Central Board of Secondary Education) 10ஆம் வகுப்புக்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் 25 ஆயிரத்து 724 பள்ளி மாணவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த 7 ஆயிரத்து 603 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 22 இலட்சத்து 38 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில் நாடு முழுவதும் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 93.12 ஆக இருந்த நிலையில், தேர்ச்சி சதவீதம் 0.48 சதவீதம் அதிகரித்துள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 94.75 சதவீதம் மாணவிகளும், 92.71 சதவீதம் மாணவர்களும், 91.30 சதவீத மூன்றாம் பாலினத்தவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் 99.75 சதவீதம் தேர்ச்சி விகிதத்தைப் பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தை பெற்றுள்ளது. 99.60 சதவீத தேர்ச்சியுடன் விஜயவாடா மண்டலம் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் போபால் மண்டலம் 90.58 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்று கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. 99.30 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் சென்னை நான்காம் இடத்தையும் பிடித்துள்ளது.