தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய வழக்கு; கைதான இருவருக்கு சிபிசிஐடி சம்மன்.. - CBCID summon

CBCID Summon: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், இரண்டு பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

CBCID Summon
சிபிசிஐடி சம்மன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 3:58 PM IST

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6ஆம் தேதி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தைப் பறிமுதல் செய்து, அதனைக் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று பேரைக் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் இருந்து பணம் கொண்டு வந்ததாகவும், அந்த பணம் தேர்தல் செலவுக்காகக் கொண்டு சென்றதாகவும் வாக்குமூலம் அளித்தனர். மேலும், அதில் பல்வேறு நபர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும், சென்னையில் பல்வேறு இடங்களிலிருந்து பணம் கைமாற்றிக் கொண்டு செல்வதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் பாஜக நிர்வாகி கோவர்தனுக்கு சொந்தமான வீடுகள், இடங்கள், ஹோட்டல்களில், தாம்பரம் காவல் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தி, பணம் மற்றும் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

மேலும், அதில் பல்வேறு நபர்களுக்குச் சம்மன் அனுப்பி, தாம்பரம் போலீசார் விசாரணை செய்து வாக்கு மூலங்களை வீடியோ பதிவு செய்து வைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கைத் தீவிரமாக விசாரிக்க, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் நேற்று (ஏப்ரல் 29) இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்ற பின்பு, தாம்பரம் ரயில் நிலையத்தில் பணம் கொண்டு சென்று சிக்கிய மூன்று பேர் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

மேலும், தாம்பரம் ரயில் நிலையம், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல், அவரது உறவினரான முருகன் இல்லம் ஆகிய இடங்களுக்குச் சென்று, சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், பணம் கொண்டு சென்று தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கிய மூவரில், நவீன் மற்றும் பெருமாள் ஆகிய இருவருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் இருவரும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களிடம் இருந்த பணம் யாருடையது, எங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது, யாருக்குக் கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி, அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகனையும் அழைத்து விசாரணை செய்த பின், திருநெல்வேலி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனையும் நேரில் அழைத்து விசாரணை செய்ய சிபிசிஐடி போலீஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:சித்த மருத்துவர் குடும்பத்துடன் மோதல்.. சென்னை இரட்டைக்கொலை வழக்கில் வடமாநில இளைஞர் கைது! - Chennai Double Murder Case

ABOUT THE AUTHOR

...view details