தமிழ்நாடு

tamil nadu

சொந்த கட்சியிலே கிளம்பிய எதிர்ப்பு.. வெற்றி வாகை சூடிய ராபர்ட் புரூஸ்.. சாதிப் பின்னணி காரணமா? - nellai candidate robert bruce

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 8:31 PM IST

Tirunelveli Robert Bruce: நெல்லை மக்களவைத் தொகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருப்பதற்கு சாதிப் பின்னணியும் காரணம் எனக் கூறப்படுகிறது.

nellai candidate robert bruce
nellai candidate robert bruce (Credit - Etv Bharat Tamil Nadu)

திருநெல்வேலி:நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் களம் இறக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ஒரு லட்சத்து 65,620 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ராபர்ட் புரூஸ்சை எதிர்த்த பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி, நாம் தமிழர் கட்சி சத்தியா உட்பட 25 பேர் களத்தில் இருந்தனர்.

அதேநேரம், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது முதல் சுற்று முடிவில் இருந்து கடைசி சுற்று வரை ராபர்ட புரூஸ் தான் முன்னிலை வகித்து வந்தார். இறுதியாக, அவர் 5 லட்சத்து 2,296 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதற்கிடையில், நெல்லை தேர்தல் களத்தில் காங்கிரஸுக்கு எதிராக பாஜக சார்பில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய நயினார் நாகேந்திரன் களமிறக்கப்பட்டார்.

நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை, ஏற்கனவே அதிமுகவில் அமைச்சர் பதவி உள்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன், தற்போது அக்கட்சியில் சட்டமன்ற குழுத் தலைவராகவும் இருந்து வருகிறார். மேலும், நயினார் நாகேந்திரன் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் நன்கு மக்கள் மத்தியில் அறியப்படக்கூடியவர்.

குறிப்பாக, நெல்லை தொகுதி முழுவதும் மக்களால் அறியப்பட்டவர் என்பதாலும், முன்னாள் அதிமுக அமைச்சர் என்ற முறையிலும் நெல்லையில் நயினார் நாகேந்திரன் பாஜகவின் வலுவான வேட்பாளராக பார்க்கப்பட்டார். அதேபோல், நிச்சயம் காங்கிரசுக்கு நயினார் நாகேந்திரன் கடும் போட்டி ஏற்படுத்துவதோடு அவர் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால், நயினார் நாகேந்திரன் பெறவில்லை. வெறும் 3,36,676 வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார்.

காங்கிரஸ் வெற்றிக்கு காரணம் என்ன?நயினார் நாகேந்திரன் வலுவான வேட்பாளராக இருந்தாலும் கூட நெல்லை தொகுதியைப் பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற தேர்தல் வரலாற்றில் சாதி ரீதியாகவே வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு வெற்றி கண்டு வருகின்றனர். குறிப்பாக, நெல்லை தொகுதியில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவு வசிக்கின்றனர். மொத்தம் 16 லட்சம் வாக்காளர்கள் நெல்லை தொகுதியில் உள்ள நிலையில், இதில் நாடார் சமூக வாக்காளர்களே மெஜாரிட்டியாக உளனர்.

மொத்த வாக்காளர்களில் சுமார் 22 சதவீதம் பேர் (5,00,000) நாடார் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களாக உள்ளனர். அதிலும் குறிப்பாக, இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் 30 சதவீதம் ( 13,13,384) வரை இருக்கின்றனர். இரண்டாவதாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 15 சதவீதம் பேர் (2.50 லட்சம் பேர்) மூன்றாவதாக தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 12 சதவீதம் பேரும் (2.13 லட்சம்) யாதவ சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 9 சதவீதம் பேரும் (1.50 லட்சம்) முஸ்லீம் 8 சதவீதம் ( 1.30 லட்சம்) இருக்கின்றனர்.

நாடார் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் பேர் இருப்பதால், இதுவரை நடந்த தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் நாடார் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையே நெல்லையில் களம் இறக்குகின்றனர். அந்த வகையில், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த நாடார் சமூக வேட்பாளர் ஞானதிரவியம் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வழக்கம்போல் இந்த முறையும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நாடார் சமூகத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ்சை களமிறக்கியது. அதேநேரம், பாஜக தேவர் சமூகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனை களமிறக்கியது. எனவே, நயினார் நாகேந்திரன் வலுவான வேட்பாளராக இருந்தாலும், சாதி ரீதியாக அவருக்கு நெல்லை தொகுதியில் பெரும் பின்னடைவு ஏற்படலாம் என ஆரம்பத்திலிருந்து கூறப்பட்டது. அதேநேரம், இதுவரை நடைபெற்ற சாதி ரீதியான வெற்றி என்ற போக்கை மாற்றிக் காட்டும் வகையில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என பாஜகவினர் கூறி வந்தனர்.

அதேபோல், தற்போது வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனவே, வெளியூர் நபர் என்பதால் அவருக்கு ஆரம்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக, அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சொந்த தொகுதியில் ஏற்கனவே பல மூத்த நிர்வாகிகள் இருக்கும்போது வெளியூர் நபரை எப்படி நிறுத்தலாம் என கட்சித் தலைமையிடம் முறையிட்டனர்.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல், அவர் தங்கள் கட்சி அறிவித்த வேட்பாளர் ராபர்ட் பரூஸ்சுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இச்சம்பவம் அப்போது பெரிதும் பேசப்பட்டது.

பின்னர், மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதன் பேரில், ராமசுப்பு தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதுபோன்று சொந்த கட்சியிலேயே காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிர்ப்பு இருந்ததால் அவரது வெற்றி பாதிக்கப்படும் என்றும் ஒரு தரப்பினர் பேசினர். ஆனால், ராபர்ட் புரூஸ் எளிதில் வெற்றி பெற்றுள்ளா்.

மேலும், தேர்தல் நேரத்தில் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் 4 கோடி சென்னையில் பிடிபட்டது. இச்சம்பவம் அப்போது பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த பணத்தை அவர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து வரச் சொன்னதாக கூறப்பட்டது. இந்த விவகாரமும் நயினார் நாகேந்திரனுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியது.

ராபர்ட் புரூஸ் வெற்றி குறித்து காங்கிரஸ் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்புவிடம் ஈடிவி பாரத் சார்பில் தொலைபேசியில் பேசிய போது, “இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஒட்டுமொத்தமாக ராகுல் காந்தி மீது மக்களுக்கு ஒரு தாக்கம் இருந்தது. இதனால் வேட்பாளர் யார் என்று கூட பார்க்காமல் மக்கள் வாக்களித்துள்ளனர்.

நெல்லையில் காங்கிரஸ் தான் வலுவாக உள்ளது. எனவே, எதிரே பாஜக வேட்பாளர் இருந்ததால் எங்கள் வெற்றி எளிதானது. நயினார் நாகேந்திரன் வலுவான வேட்பாளராக இருந்தாலும், தேர்தல் நேரத்தில் அவருக்கு நிறைய பிரச்னைகள் இருந்தது. மேலும், மக்கள் மாற்றம் வர வேண்டும் என்று எண்ணினர்” என்று கூறினார்.

இதையும் படிங்க:மு.க.ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details