தேனி:ஆனைமலையான்பட்டி, வெள்ளைக்காரடு பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன். இவர் வசிக்கும் வீட்டின் அருகே தனியார் பள்ளியில் தாளாளராகப் பணியாற்றி வரும் பீட்டருக்கு சொந்தமான பி.எட் கல்லூரி ஒன்றும் உள்ளது. இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே, நிலம் பிரச்னை நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப்.11) குணசேகரன் வீட்டில் இருந்தபோது, அவர்கள் தங்கை மற்றும் தங்கையின் கணவர் உள்ளிட்டோர் விருந்தினராக வருகை தந்துள்ளனர். மேலும், குணசேகரனின் தந்தை நடராஜன் வீட்டிற்கு வெளியே இருந்துள்ளார். அப்போது அந்தப் பகுதிக்குத் தனியார் பள்ளி தாளாளர் பீட்டர் மற்றும் அவருடன் கல்லூரி வார்டன் முத்துப்பாண்டி என்பவருடன் மேலும் சில நபர்களும் வந்துள்ளனர்.
பின்னர் குணசேகரன் வீட்டு அருகே அத்துமீறி வந்து சத்தம் போட்டதாகவும், அந்தச் சத்தம் கேட்டு குணசேகரன், குணசேகரனின் தங்கை மற்றும் தங்கை கணவர் உள்ளிட்டோர் வெளியே வந்து தட்டி கேட்டதாகவும், மேலும் குணசேகரின் தந்தை அந்த இடத்தில் இருந்தபோது, அவரை கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தனியார் பள்ளியின் தாளாளர் மற்றும் அவருடன் வந்த நபர்கள் சாதி ரீதியாக குணசேகரன் குடும்பத்தாரைத் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, குணசேகரன் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தனியார் பள்ளி தாளாளர் மற்றும் அவருடன் வந்த வார்டன் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தனியார் பள்ளி தாளாளரும், தன்னை குணசேகரன் குடும்பத்தார்கள் தாக்கியதாக அளித்த புகாரின் பேரில், குணசேகரன் தரப்பின் மீதும் வழக்குப்பதிவு செய்த ராயப்பன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில் குணசேகரன் கொடுத்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், பீட்டர் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பள்ளியின் தாளாளர் பீட்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில், குணசேகரன் மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மறைந்த விஜயகாந்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்..!