சென்னை: கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்றதாகக் கடந்த 2018ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக சிபிசிஐடி விசாரிக்கும் வழக்கை, பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டுமெனப் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா, நீதிபதி சத்தியநாராயணன் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த குற்ற வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து, தீர்ப்பு ஏப்ரல் 26ஆம் தேதிக்கு விசாரணை நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது" என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.