சென்னை:எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என ரயில்வே மேலாளருக்கு வந்த கடிதத்தால் அதிர்ச்சி அடைந்த ரயில்வே அதிகாரிகள், உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் எழும்பூர் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் கடிதம் (Credits - ETV Bharat Tamil Nadu) எழும்பூர் ரயில் நிலையம் மேலாளருக்கு வந்த கடிதத்தில், மதுராந்தகம் தாலுகா புக்கத்துறை கிராமம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த மேகநாதன் என்பவரிடம் இருந்து இந்த கடிதம் வந்துள்ளதாகவும், அதில் வன்னியர் சமுதாயத்தை ஒழித்து வரும் திமுக அரசைக் கண்டித்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், அந்த கடிதத்தில், "திமுக ஆட்சியில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியை தரக்குறைவாக பேசி வரும் திமுக அரசுக்கும், கட்சிக்கும் ஒரு பாடகமாக கருதி சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இரவு 12.15 மணி அளவில் வெடிகுண்டு வெடிக்கும்படி வைத்துள்ளேன். என் வன்னியர் சமுதாயத்துக்காக ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்" எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே காவல்துறையினர் வெடுகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள பார்சல்கள், பயணிகளின் உடைமைகளையும் தீவிர சோதனை செய்து வருகின்றனர். மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள கடிதத்தில் வந்துள்ள முகவரி உண்மையா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? “மின்சார தீவிரவாதம்”.. அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு! - TN ELECTRICITY TARIFF HIKE