சென்னை:ஏர் இந்தியாவின் சிங்கப்பூர் விமானம், இண்டிகோவின் ஜெய்ப்பூர் விமானம், ஆகாஷாவின் பெங்களூரு விமானம் ஆகிய விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அந்தந்த நிறுவனங்களுக்கு மிரட்டல் தகவல் வந்ததால் சென்னை விமான நிலையத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
இன்று பகல் 12:30 மணி அளவில் ஏர் இந்தியா, இண்டிகோ, மற்றும் ஆகாஷா விமான நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு முகவரி இல்லாமல் டார்க் நெட் இணையதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
ஏர் இந்தியாவுக்கு வந்த மிரட்டல் மெயிலில், சிங்கப்பூரிலிருந்து 124 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் அதன் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் மெயிலில், ஜெய்பூரில் இருந்து 146 பயணிகளுடன் வந்து கொண்டிருக்கும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல் சென்னையில் இருந்து இன்று பகல் 1.40 மணிக்கு பெங்களூர் புறப்பட இருந்த ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக அந்த நிறுவனத்துக்கு வந்த மிரட்டல் மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த விமான நிறுவனங்கள் உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு அவசர தகவல் அனுப்பினர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடி குண்டு நிபுணர்கள், அதிரடி படை வீரர்கள், விமான பாதுகாப்பு படையினர், தீவிர நடவடிக்கைகளில் இறங்கினர்.
இதையும் படிங்க:'படிப்பில் தங்கம்'... சென்னையில் போதை பவுடர் தயாரிக்க முயன்ற கும்பலின் அதிர்ச்சி பின்னணி!
இந்த நிலையில், சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று பகல் 1.18 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக வந்து தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டதும் வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி பரிசோதித்தனர். வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. எனவே அது புரளி என்று தெரிந்தது.
அதேபோல், ஜெய்ப்பூரில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மதியம் 1.05 மணிக்கு பத்திரமாக வந்து தரையிறங்கியது. பயணிகள் கீழே இறங்கியதும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர விமானத்துக்குள் சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் எதுவும் இல்லாததால் இதுவும் புரளி என்று தெரிந்தது.
தொடர்ந்து, இன்று மதியம் 1.40 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல இருந்த ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானத்துக்குள்ளும் வெடிகுண்டு நிபுணர்கள் ஏறி பரிசோதித்தனர். ஆனால், வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. எனவே இதுவும் புரளி என்று தெரிய வந்தது. இதையடுத்து ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பிற்பகல் 2.05 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூருக்கு வழக்கம் போல் புறப்பட்டு சென்றது.
டார்க் நெட் இணையதளம் மூலமாக அனுப்பிய அந்த மர்ம ஆசாமிகள் யார்?என்று சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதே நேரத்தில் மர்ம ஆசாமிகள், டார்க் நெட் இணையதளம் மூலம் அனுப்பியுள்ளதால் தகவல் அனுப்பிய முகவரியை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் சைபர் க்ரைம் உதவியுடன் வெடிகுண்டு புரளி மர்ம ஆசாமிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்