சென்னை: அந்தமானில் இருந்து ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பகல் ஒரு மணிக்கு சென்னைக்கு வந்துவிட்டு, அதே விமானம் மீண்டும் மாலை 3 மணிக்கு, அந்தமானுக்கு புறப்பட்டுச் செல்லும். அதன் படி வந்த விமானம் இன்று சென்னை விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் அந்தமான் செல்வதற்காக 99 பயணிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து இருந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ரீஜினல் மேனேஜர் அலுவலகத்திற்கு, இன்று பிற்பகல் 2.30 மணி அளவில், ஒரு மர்ம இ-மெயில் வந்தது. அதில் ஸ்பைஸ் ஜெட் தனியார் பயணிகள் விமானம் அந்தமான், டெல்லி, புனே, கோவா மற்றும் மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை அடுத்து பரபரப்படைந்த பைஜெட் ஏர்லைன்ஸ் ரீஜனல் மேனேஜர் அலுவலக அலுவலர்கள், உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு அவசர தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் பரபரப்பு அடைந்தனர். ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், சென்னையில் இருந்து அந்தமானுக்கு மட்டுமே இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கோவா, புனே ஆகிய இடங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் கிடையாது.
இதையும் படிங்க:இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனப் பணிகளை மாதக்கணக்கில் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி!
எனவே சென்னையில் இருந்து இன்று மாலை 3 மணிக்கு, அந்தமான் புறப்பட இருந்த ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானத்தை, உடனடியாக சோதனையிட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதை அடுத்து அந்தமான் செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்பைஜெட் ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணிகள் யாரையும் ஏற்றாமல், விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
அதோடு வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்கள் உதவியுடன் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டது. மேலும் சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதி மற்றும் பயணிகள் தங்கி இருக்கும் இடங்கள் ஆகிய பகுதிகளிலும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லாததால், இது வழக்கமாக சமூக விரோதிகள் கிளப்பி விடும் வதந்தி என்று தெரிய வந்தது. இதை அடுத்து சென்னை விமான நிலைய போலீசார், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தமான் செல்ல இருந்த விமானத்தில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது சோதனையில் உறுதியானதை அடுத்து, விமானம் பறப்பதற்கு, விமான பாதுகாப்புத்துறை அனுமதி அளித்தது. இதை அடுத்து பயணிகள் 99 பேரும், விமானத்தில் ஏற்றப்பட்டு, விமானம் மாலை 4.20 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்