கோயம்புத்தூர்:கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி இல்லத்தில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், 'பிரதமரின் மனதின் குரல்' நிகழ்ச்சியினை கட்சியினரோடு சேர்ந்து பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து வானதி சீனிவாசன் பேசியதாவது, “முதலமைச்சரின் மகன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். 400 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக, தியாகியாக திமுகவிற்கு இருந்து ‘எப்படி எல்லாம் வேலை வாங்கிக் கொடுப்பதற்காக பணம் வாங்கினோம். ஆனால், புகார் கொடுத்த உடன் பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளோம்’ என்று கூறிய ஒரு முன்னாள் அமைச்சர் மீண்டும் அமைச்சராகிறார்.
திராவிட மாடல் என்பது வாரிசு அரசியல்:திமுக 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு திராவிட மாடல் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். அதற்கு அவர்கள் சமூகநீதி, சமத்துவம், பெரியாரிய சிந்தனை என்று பல்வேறு விளக்கங்களை கூறுகிறார்கள். ஆனால், திராவிட மாடல் என்றால் வாரிசு அரசியல், குடும்ப அரசியல், ஊழல் அரசியல், ஊழலுக்கு துணை போகின்ற அரசியல்.
அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கு ஊழல்:அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை வைத்துக்கொண்டு, மாநிலத்தின் முதலமைச்சர் நேர்மையான ஆட்சியைத் தருகிறேன் என்று எவ்வாறு கூற முடியும்? வாரிசு இல்லாதவர்கள் வாரிசு அரசியலைப் பற்றி பேசுகிறார்கள் என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். திமுக ஒரு காலத்தில் ஜனநாயக ரீதியான கட்சியாக இருந்தது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற அமைப்பாக அது பார்க்கப்பட்டது. எளிய மனிதர்கள் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்பதை எல்லாம் அந்தக் கட்சியில் பார்க்க முடிந்தது.
துணை முதலமைச்சருக்கான அவசியம் ஏன்?ஆனால், இன்று திமுகவில் 50, 60 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்கள் எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே தொடர்ந்து ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் இதுதான் திராவிட மாடலா? இன்று துணை முதல்வருக்கான அவசியம் ஏன் வந்திருக்கிறது? இதற்கான காரணத்தை முதலமைச்சர் கூற வேண்டும்.
இதையும் படிங்க:மீண்டும் மின்சாரத் துறை அமைச்சரானார் செந்தில் பாலாஜி.. புதிய அமைச்சர்களுக்கு என்னென்ன பதவி?
அன்பில் மகேஷ், டி.ஆர்.பி ராஜா துணை முதலமைச்சர் பதவி:மகன் என்ற ஒரு காரணத்தை தவிர வேறு ஏதேனும் தகுதிகள் இருக்கிறதா? இளைஞருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றால் அன்பில் மகேஷ் இருக்கிறார். அனுபவ சாலிகள் வேண்டுமென்றால் டி.ஆர்.பி ராஜா இருக்கிறார். திராவிட மாநாடு ஆட்சியில் பட்டியல் இனத்தைச் சார்ந்த ஒருவரை துணை முதல்வர் பதவி கொடுக்க மறுப்பது ஏன்? பட்டியல் இனத்தை சார்ந்த மக்களுக்கு என்ன இலாக்காக்கள் கொடுக்கப்பட்டுள்ளது?