சென்னை:இனம், மொழி, ஜாதி வெறியைத் தூண்டி அரசியல் நடத்தும் குடும்ப கட்சிகளின் தேர்தல் அறிக்கை போலக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்து பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோயம்புத்தூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியாவும், ராகுலும் வெளியிட்டுள்ளனர். 2014, 2019 ஆகிய இரு மக்களவைத் தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடப் பெற முடியாத அளவுக்கு, காங்கிரஸ் கட்சியை இந்திய மக்கள் படுதோல்வி அடையச் செய்தார்கள்.
சுதந்திர இந்தியாவில் 55 ஆண்டுக் காலம் ஊழல், குடும்ப ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சியால், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி, அதிகாரம் இல்லாமல் இருக்க முடியவில்லை. அதனால், தங்களைப் போல ஊழல், குடும்ப ஆட்சி நடத்தி வரும் மாநிலக் கட்சிகள் ஆதரவுடன் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு கண்டு வருகிறார்கள். அதற்காக மக்களை ஏமாற்ற, தேர்தல் அறிக்கை என்ற பெயரில் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 6 ஆயிரம் ரூபாய் தருவோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டின. இந்த முறைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். கடந்த 75 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியின் ஏமாற்று வேலைகளைப் பார்த்து வரும் இந்திய மக்கள், இந்த பொய் புரட்டுகளை எல்லாம் நம்ப மாட்டார்கள்.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வைக் கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சி தான். ஆனால் இப்போது மக்களை ஏமாற்ற நீட் தேர்வை மாநில அரசு விரும்பினால் நடத்திக் கொள்ளலாம் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். இது மருத்துவ கல்வியையே சீர்குலைக்கும் முயற்சி. தங்கள் அரசியல் சுய லாபத்திற்காக மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடும் காங்கிரஸ் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.