கோயம்புத்தூர்:நாடாளுமன்ற மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை திரித்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என பாஜக மகளிர் அணியின் தலைவரும், கோவை தெற்கு பாஜக சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் டிசம்பர் 17 ஆம் தேதி நடந்த அரசியல் சாசனம் மீதான விவாதத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, "தற்போது 'அம்பேத்கர், அம்பேத்கர்' என்று பேசுவது பேஷனாகி விட்டது. இதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்திருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்" என்று பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நேற்று (டிசம்பவர் 18) புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் படத்தை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (டிச.19) வியாழக்கிழமை தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில், அம்பேதகர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை திரித்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது என பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கொடுக்கும் இடத்திற்கு மறுப்பா?
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பட்டியலின மக்களுக்கு அரசியல் அதிகாரம் தேவை. அதுவே அவர்களுக்கு உண்மையான விடுதலை. ஆனால், காங்கிரஸ், திமுக பட்டியலின மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க மறுக்கிறது. பட்டியலின மக்களை தொடர்ந்து வாங்கும் இடத்திலேயே வைத்திருக்க விரும்புகிறது. கொடுக்கும் இடத்திற்கு வர விடுவதில்லை.
அம்பேத்கர் மீது திமுகவுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மதிப்பும், மரியாதையும் இருந்தால் உடனடியாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதலமைச்சராக்க வேண்டும். திமுக பொதுச்செயலாளராக, அமைச்சர்களாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும். உள்துறை அமைச்சர் பேசியதை திரித்து வெற்றுக் கூச்சல் போடுவதில் பிரயோஜனமும் இல்லை.