சென்னை:18வது நாடாளுமன்றத் தேர்தலின் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் வெஸ்ட்ரி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பாஜக ஓபிசி பிரிவு மாநிலச் செயலாளர் சூர்யா சிவா வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா சிவா, 'தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஒரு மாற்றத்திற்காக தயாராக இருக்கிறார்கள். இந்த தேர்தல் முடிவில் அது கண்டிப்பாக தெரியும். 400 இடங்களைப் பெற்று, மீண்டும் மோடி பிரதமராக ஆட்சி அமைப்பார். தமிழ்நாட்டில் இருந்து குறைந்தது 10-க்கும் மேற்பட்ட பாஜக உறுப்பினர்கள், பிரதமருக்கு வலுசேர்ப்பார்கள்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, எந்த கட்சியினரும் வாக்குக்கு பணப்பட்டுவாடா செய்யவில்லை. திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மட்டுமே வாக்குக்கு பணம் கொடுத்துள்ளார் எனத் தகவல் கிடைத்தது.
திராவிடக் கட்சிகளுக்கு பணத்தை வைத்து வாக்கை வாங்கலாம் என்ற எண்ணம் உள்ளது. பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பணம் வேண்டாம் என்று புறக்கணித்து உள்ளனர். மாநிலம் முழுவதும் பாஜகவினர் வாக்குக்கு பணம் வழங்கவில்லை. பொதுமக்கள் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, கோவையில் Gpay மூலமாக பாஜகவினர் பணம் கொடுத்ததாக திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர் என்ற கேள்விக்கு, 'தேர்தல் ஆணையத்திடம் அப்படி புகார் கொடுத்துள்ளனர். இவர்களே இவ்வளவு தெளிவாக கொடுக்கும் போது, பாஜகவினர் Gpay-வில் கொடுப்போமா? கொடுக்க வேண்டும் என முடிவு செய்தால் எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம்” எனப் பேசினார். கோவையில் நான் பிரச்சாரம் செய்தபோது, பூத் சிலிப் கொடுக்கும் போதே, பணத்தை திமுகவினர் கொடுத்துள்ளனர் எனக் குற்றச்சாட்டினார். தேர்தல் அதிகாரிகள் அமைச்சர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர்' எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:உதயநிதியின் சனாதன தர்மம் கருத்து தவறானது.. அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்" - தெலங்கானா முதலமைச்சர்! - Revanth Reddy Santan Dharma Issue