திருச்சி:நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற குறிக்கோளில், சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
மேலும், பிரதான அரசியல் கட்சியின் தலைவர்கள், தனது கூட்டணி மற்றும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பாஜவின் தேசிய தலைவர் நட்டா பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தருக்கு ஆதரவாக, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் முசிறியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 'ரோடு ஷோ' மூலம் வாக்கு சேகரித்தார்.
இவரது வருகையையொட்டி, முசிறி அருகே ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பாஜக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு நடத்தப்பட்டது. இந்த ரோடு ஷோ முசிறியில் துறையூர் சாலை ரவுண்டானாவில் இருந்து கைகாட்டி வரை நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பின்னர், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து, முசிறி கைகாட்டியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், "இந்த தேர்தல் பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்குவதற்கான தேர்தல்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செயல்படுத்த முடியாத பல்வேறு திட்டங்களை, கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி உள்ளார். அயோத்தியில் ராமர் கோயிலை கட்டி, எத்தனையோ ஆண்டுகால கனவை நனவாக்கி இருக்கிறார். பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி, நல்லாட்சிக்கான உத்தரவாதத்தைக் கொடுத்திருக்கிறார்.
தமிழகத்தின் மீதும், தமிழ் மீதும் பெரிதும் விருப்பம் கொண்டுள்ள பிரதமர் மோடி, கடந்த ஆட்சியாளர்களை விட நான்கு மடங்கு அதிகம் உதவி செய்துள்ளார். ஆனால், தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுகவினர் அதை மறுக்கின்றனர். திமுக என்றாலே குடும்ப அரசியல், ஊழல், பணம் சுரண்டல், கட்டப்பஞ்சாயத்து என்று தான் அர்த்தம். இப்படிப்பட்ட ஆட்சி ஒழிய வேண்டும்.
உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி தமிழ் மொழி பற்றியும், தமிழ் கலாச்சாரத்தை பற்றியும், பாரதி மற்றும் திருவள்ளுவரைப் பற்றியும் தான் பேசுகிறார். தமிழக மக்கள் போற்றி பாதுகாத்த செங்கோலை, நாடாளுமன்றத்தில் நிறுவி பெருமை சேர்த்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருச்சி தொகுதியில் திருப்புமுனையை ஏற்படுத்தப்போவது யார்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? - Lok Sabha Election 2024