தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தைப்பூசத்திற்கு வாழ்த்து சொன்ன விஜய்... வானதி சீனிவாசன் வேதனை... ஏன்? - TVK VIJAY

தவெக தலைவர் விஜய் தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்திருப்பது குறித்து கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தேரை வடம் பிடித்து இழுக்கும் வானதி சீனிவாசன்
தேரை வடம் பிடித்து இழுக்கும் வானதி சீனிவாசன் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2025, 4:41 PM IST

கோயம்புத்தூர்: தைப்பூசத்தை முன்னிட்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் முருகனுக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தின் துவக்க நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். மேலும், இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார். மேலும், இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த தேரோட்டமானது கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு புறப்பட்டு ஈஸ்வரன் கோயில் வீதி, இக்பால் தெரு, பெருமாள் கோயில் வீதி, ஒப்பணக்கார வீதி டவுன்ஹால் வழியாக மீண்டும் கோயிலை வந்ததடைந்தது. இதனால் இப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

கார் சிலிண்டர் வெடி விபத்து

இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது; சங்கமேஸ்வரர் கோயிலுக்கு எங்குமில்லாத சிறப்பு உள்ளது. வருடத்தில் அனைத்து நாட்களிலும் இங்குள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கார் வெடிகுண்டு சம்பவம் நடந்தது. அது மத அடிப்படைவாதியால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஆனால் மாநில அரசு இன்னும் சிலிண்டர் வெடி விபத்து என்கிறது.

வானதி சீனிவாசன் (credit - ETV Bharat Tamil Nadu)

சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ராஜகோபுரம்

கோவை மக்களை காப்பாற்றியவர் சங்கமேஸ்வரர், 20 வருடங்களாக நின்றிருந்த தேர்த் திருவிழா சமீப காலமாக தான் நடைபெற்று வருகிறது. அதே சமயம் சிவராத்திரி அன்று திருத்தேர் விழா இங்கு விமர்சையாக நடைபெறும், ஆனால் 30 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளதை மீண்டும் நடத்த வேண்டும் என்று பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை முன்வைத்து வருகிறார்கள். சங்கமேஸ்வரர் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு முன் வைத்திருந்தேன். கோரிக்கை முன்வைத்து ஒரு வருடம் ஆகியும் தற்பொழுது வரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நாடு சனாதன தர்மத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஊறியது.

சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டம் (credit - ETV Bharat Tamil Nadu)

சிறுபான்மை அரசியல்

சமீப காலமாக சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிக்காக, இந்து கோயில்களுக்கு தொந்தரவு கொடுப்பது, இந்துக்களை இழிவு செய்வது, இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் சிறுபான்மை அரசியல் செய்து வருகிறார்கள். திமுகவினர் மற்றும் அவர்களின் கூட்டணியில் உள்ள கட்சியினர் ஒரு மலையின் பெயரை மாற்றவே உறுதுணையாக இருப்பது வெட்கக்கேடானது.

சனாதன தர்மத்திற்கு ஆபத்து வரும் போது சமூகமே தானாக வந்து காத்துக் கொள்ளும் நிலை இங்கு உருவாகிறது. இந்து கோயில்கள் பிரச்சனை பற்றி மற்ற எந்த கட்சிகளும் வாய் திறப்பதில்லை, யாருமே பேசாத போது பாஜக, இந்து மக்கள் கட்சி போன்ற இயக்கங்கள் நாங்கள் போராடும் கட்டாயம் ஏற்படுகிறது'' என்றார்.

விஜய் வாழ்த்து

தவெக தலைவர் விஜய் தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்திருப்பது குறித்தான கேள்விக்கு, '' தைப்பூசத்திற்கு வாழ்த்து சொல்ல கூடிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிலைக்கு தமிழ்நாடு வந்திருப்பது வேதனை அளிக்கிறது'' என்றார்.

விஜய், பிரசாந்த் கிஷோரை சந்தித்தது குறித்தான கேள்விக்கு, அதற்கு நாங்கள் என்ன கருத்து சொல்வது? எனவும் அவருடைய தேர்தல் வெற்றிக்காக அவர்கள் சந்திக்கிறார்கள் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details