கரூர்: பாஜக கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ஆய்வு கூட்டம், கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், அக்கட்சியின் எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் பேசியபோது, “தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவிற்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள். கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மக்களுடன் பணியாற்றுவதற்கும் தேர்தல்கள் வாய்ப்பாக இருக்கிறது. அந்த வகையில் இந்த நாடாளுமன்ற தேர்தலை பாஜக நன்றாக எதிர்கொண்டது. பாஜகவை பொறுத்தவரை இது நல்ல தேர்தல். அடுத்த தேர்தலில் வெற்றி பெற இந்த தேர்தல் உதவும்.
பாஜக நோட்டா கட்சி. அதற்கு ஒன்றுமில்லை என்ற பிம்பத்தை கொடுப்பதற்காக, எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய விளம்பரரீதியான விஷயம் தான் அது. தற்போது பாஜக எம்எல்ஏ-க்கள் வெற்றிபெற்றுள்ளனர். அதிமுக உள்ளிட்ட கட்சிகளை தாண்டி அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர். நோட்டா என்பது கடந்த காலம். தற்போது தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அரசியல் சக்தி என்பதை இந்த தேர்தல் முடிவு செய்திருக்கிறது.
சட்டமன்றத்தில் மதுவிலக்கு தொடர்பாக சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். குடி என்பது தமிழகத்தில் சர்வசாதாரணமான விஷயம் என அமைச்சர்கள் கொண்டு சொல்கிறார்கள். பூரண மதுவிலக்கை கொண்டு வரமுடியாது என அவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதன் வாயிலாக, நாங்கள் வந்தால் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்கிற மக்களுக்கான வாக்குறுதியை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள்.