சென்னை: தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், 2001-2006 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
அப்போது வருமானத்துக்கும் அதிகமாக ரூ.4.90 கோடி அளவுக்குசொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது 2006-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான, இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் பல கோடி ரூபாய் சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக கூறி அமலாக்கத்துறை தன்னை ஒரு சாட்சியாக இணைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி, திருச்செந்தூர் அருகே நடைபெற்ற இந்தியா கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் அளித்திருந்தார்.
அதன்படி, மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 292/B (பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில ஆபாசச் செயலைப் புரிந்தல் அல்லது ஆபாச பாடலைப் பாடுதல், வாசகத்தை உச்சரித்தல்) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு நாலை விசாரணைக்கு வர உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் அனைவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகி, 22 செப்டம்பர் 2017ல் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, Crl.R.C (MD) 304/2014 வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் முறையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க:மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறும்: நெல்லை கூட்டத்தில் முதலமைச்சர் ஆவேச பேச்சு! - Mk Stalin Propaganda