திருச்சி: தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில மையக் குழு கூட்டம் நேற்று (செப்.13) திருச்சியில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மையக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹெச்.ராஜா, "மத்திய மாநில அரசு இணைந்து செயல்பட்டால் தான் எந்த திட்டங்களாக இருந்தாலும் விரைந்து செயல்படுத்த முடியும். மத்திய அரசு வழங்கும் நிதியை செயல்படுத்தும் இடத்தில் மாநில அரசு தான் உள்ளது.
மத்திய அரசின் விஸ்வகர்மா நிதி உதவி திட்டத்தை இதுவரை மாநில அரசு வெளியிடவில்லை. வரும் 17ஆம் தேதி விஷ்வர்மா தினம். அந்த தினத்திற்குள் மாநில அரசு அரசிதழில் வெளியிட்டால், தொழிலாளர்களின் அமைப்பான விஸ்வகர்மாவைச் சேர்ந்தவர்களுக்கு பயனாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து கோவை அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "32 விதமான வரிகளை ஒன்றுபடுத்தி சரக்கு மற்றும் சேவை வரியாக ஒன்றிணைத்து, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. புதிதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே வெண்ணெய்க்கு வரி இருந்தது. ஜிஎஸ்டி விவகாரத்தில் சில கோரிக்கைகள் இருக்கலாம் அந்த கோரிக்கைகளை பரிசிலினை செய்ய அரசு தயாராக இருக்கிறது.