சென்னை:பகுஜன் சமாஜ் கொடியைப்போல விஜயின் கட்சிக் கொடியிலும் யானை சின்னம் இருப்பதால் மக்களிடைய தேவையற்ற குழப்பம் ஏற்படும் என்றும், நடிகர் விஜய் அரசியல் நாகரிகமின்றி சட்ட விரோதமாக யானை சின்னத்தை பயன்படுத்தியிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
மனு அளித்த பின் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி கூறுகையில், “ நடிகர் விஜய் தனது கட்சிக் கொடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் யானையை பயன்படுத்தியுள்ளார். யானை சின்னம் அம்பேத்கர் போட்டியிட தேர்ந்தெடுத்த சின்னம். அம்பேத்கரின் இந்திய குடியரசுக் கட்சிக்கு யானை சின்னமாக இருந்தது. அந்த கட்சி அங்கீகாரம் இழந்த பிறகு அதை பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் வாங்கினார்.
தலித் சமூகம் யானையைப் போல முழு பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் அமரும் என்று குறிப்பிடும் வகையில் அம்பேத்கர் யானையை பயன்படுத்தினார். எனவே 3ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருக்கும் யானை போல் ஆளாளுக்கு யானையைப் பயன்படுத்த கூடாது.
ஃபெவிக்கால், முத்தூத் பைனான்ஸ் நிறுவன விளம்பரங்களில் யானை இருப்பது பிரச்சனை இல்லை. ஆனால் இன்னொரு அரசியல் கட்சி எந்த வடிவிலும் யானையை பயன்படுத்தக்கூடாது. நடிகர் விஜய் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் இதை செய்துள்ளார். சினிமாவில் இருப்பவர்கள் நல்லவர்கள் போல் நடித்து, மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வர பார்ப்பார்கள்.