திருநெல்வேலி: அய்யா வைகுண்டரின் அவதார தின விழாவை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். அந்நிகழ்ச்சியில் 'அய்யா வைகுண்டர் அருளிய சனாதானம்' என்ற நூல் வெளியிடப்பட இருக்கும் நிலையில், ஆளுநரின் சனாதன நடவடிக்கைக்கு அய்யா வைகுண்டரை பின்பற்றும் ஒரு தரப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, அய்யா தர்மயுக வழி பேரவையின் தென்மண்டல பொறுப்பாளர் தருவை முருகன் நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஆளுநரின் நிகழ்ச்சியில் சனாதனம் பற்றி குறிப்பிட்டுள்ளனர். இதற்கு கடுமையான கண்டனம் தெரவிக்கிறோம். சனாதானத்திற்கும் அய்யா வழிக்கும் சம்பந்தம் இல்லை.
அய்யா தர்மயுக வழி பேரவை நிர்வாகிகள் பேட்டி (ETV Bharat Tamil Nadu) அந்த காலத்தில் எங்களை மிகவும் அடிமைப்படுத்தினார்கள். பொதுகுளத்தில் குளிக்க முடியாது, இடுப்புக்கு மேல் வேஷ்டி கட்ட முடியாது. கோயிலை தொட்டுகூட பார்க்க முடியாத அளவு அடிமைப்படுத்தினார்கள். ஆனால் தற்போது சனாதனத்தை பயன்படுத்தி மீண்டும் எங்களை அடிமையாக்க அய்யா வழியை பயன்படுத்துகிறார்கள். அய்யா அதற்காக வரவில்லை, அய்யா வழியில் சனாதனத்தை புகுத்தினால் அது யாராக இருந்தாலும், ஆளுநராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும் ஜனாதிபதியாக இருந்தாலும் கண்டனம் தெரிவிப்போம்.
இதையும் படிங்க:திருநெல்வேலியில் கொட்டித் தீர்த்த கனமழை: குளிர்ச்சியான சூழலால் மக்கள் மகிழ்ச்சி!
ஆளுநரின் இதுபோன்ற நடவடிக்கைக்கு எதிராக பாலபிராஜதிபதி அடிகளார் தலைமையிலும், தமிழக முதல்வர் தலைமையிலும் நெல்லையில் மாநாடு நடத்த இருக்கிறோம். அய்யாவழி பெயரை சொல்லி பிரிவினை கொண்டு வருகிறார்கள், அனைத்து ஜாதிக்கும் பொதுவாக தான் அய்யா வந்தார். ஆனால் அதே நடைமுறையை பயன்படுத்தி அய்யா வழி இந்து தான் என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் அய்யா வழி இந்து இல்லை, சனாதனத்தை பயன்படுத்தி மீண்டும் எங்களை அடிமையாக்க பார்ப்பதை தான் கண்டிக்கிறோம், மாநாடு மூலம் அவர்களுக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம்."என்று அவர் கூறினார்.