சென்னை:சென்னை கொரட்டூர் வாட்டர் கெனால் சாலையில் வசிப்பவர் அஸ்வத் (வயது 32) எஸ்.பி.கே. எக்ஸ்போர்ட் என்ற பெயரில் வேர்க்கடலை ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 'ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட்' என்ற பெயரில் விளம்பரம் ஒன்று அவரது கைப்பேசிக்கு வந்துள்ளது.
அதை பார்த்த அஸ்வத், அதனை கிளிக் செய்து உள்ளே சென்று பார்த்தபோது, 'ஸ்டாக் மார்க்கெட்டில்' முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அஸ்வத்திடம் மோசடி நபர்கள் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய வியாபாரி அஸ்வத், வியாபாரத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும், லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட கும்பலிடம் இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் மர்ம நபர்கள் கொடுத்த பல வங்கி கணக்குகளில் 29 கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளார்.
இதனை அடுத்து தொடர்ந்து அவருக்கு வரவேண்டிய கமிஷன் மற்றும் முதலீடு தொகையை திரும்ப எடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வியாபாரி அஸ்வத் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் விசாரணை நடத்திய ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார், மோசடிக்காரர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கை கொண்டு திருவல்லிக்கேணி கானா பாக் தெருவைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் (34) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், முகமது இப்ராஹிம் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பல நபர்களை ஏமாற்றி, பல கோடி ரூபாய் சுருட்டியது தெரிய வந்தது. இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மூலம் ஆன்லைன் டிரேடிங்கில் பிசினஸ் செய்து லாபம் பார்க்கலாம் என ஆசையை தூண்டி, வேர்க்கடலை ஏற்றுமதி வியாபாரியிடம் 29 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து! - BALAKRISHNA REDDY