கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு கோவையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, வெளியூர்களிலிருந்து தங்கிப் படிக்கும் மாணவர்களும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பொள்ளாச்சி மருத்துவமனை சார்பாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழான ஒருங்கிணைந்த சேவை மைய (One Stop Centre) அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையிலான ஒருங்கிணைந்த சேவை மையக் குழுவினர் வால்பாறை அரசு கலைக் கல்லூரிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது மாணவிகளுடன் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா? படிக்கும் இடத்தில் அல்லது விடுதிகளில் ஏதேனும் பிரச்னை இருந்தால் எங்களிடம் கூறுங்கள் என மாணவிகளிடம் கேட்டதாகத் தெரிகிறது.
மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, சில மாணவர்கள் சோர்வாகக் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்ட போது, இந்த கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியர்கள் மற்றும் லேப் டெக்னீசியன் போன்றோர் தவறாக நடந்து கொள்வதும், அதற்காக முயல்வதும், வாட்ஸ்ஆப்பில் தவறான மெசேஜ் அனுப்புவதும் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.