கடலூர்: கடலூர் காராமணி குப்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. காராமணி குப்பத்தைச் சேர்ந்த சுதன் குமார் அவருடைய தாய் கமலேஸ்வரி மற்றும் சுதன் குமாரின் மகன் நிஷாந்தன் ஆகிய மூன்று பேரும் கடந்த ஜூலை 14ஆம் தேதி காராமணி குப்பத்தில் உள்ள தங்களது வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, மூவரும் கொலை செய்யப்பட்டு பின்பு தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏழு தனிப்படைகளை அமைத்து தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
200க்கும் மேற்பட்டோரிடம் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதே தெருவில் வசித்து வரும் சங்கர் ஆனந்த் என்பவரை நேற்று சென்னையில் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், அவரை நெல்லிக்குப்பம் கொண்டு வந்து விசாரித்த போது, அவருடன் சாகுல் ஹமீது என்பவரும் இணைந்து கொலைச் சம்பவத்தில் செயல்பட்டது தெரியவந்தது.
பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சங்கர் ஆனந்த் வாக்குமூலம் அளித்தார். அதன்படி, “தந்தையை இழந்த நான் தாயுடன் வாழ்ந்து வந்தேன். கடந்த ஜனவரி மாதம் தன்னுடைய தாயார் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் சுதன்குமார் தான் என தெரியவந்தது. அதனால் குடும்பத்துடன் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.