தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 28வது நபர் டெல்லியில் கைது! - armstrong murder case - ARMSTRONG MURDER CASE

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்பொழுது புதூர் அப்பு என்ற 28வது நபரை டெல்லியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அப்பு மற்றும் உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் புகைப்படம்
கைது செய்யப்பட்டுள்ள அப்பு மற்றும் உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2024, 7:48 AM IST

சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ஆம் தேதி 10 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை 27 நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தற்பொழுது புதூர் அப்பு என்ற 28வது நபரை டெல்லியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள புதூர் அப்பு ஆம்ஸ்ட்ராங்கைக் கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

குறிப்பாக, புதூர் அப்பு மீது இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், மறைந்த மயிலாப்பூர் ரவுடியான சிவகுமாரின் உதவியாளராகவும் புதூர் அப்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

25 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்:கடந்த ஜூலை 5-ஆம் தேதி மாலை செம்பியம் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த செப்.7ஆம் தேதி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்ளிட்ட பத்து நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த நிலையில், அவர்கள் 10 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இதன் அடிப்படையில், தற்போது மேலும் 15 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, ஹரிகரன், சதீஷ்குமார், ஹரிஹரன் சிவா, பிரதீப், முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, முகிலன், விஜயகுமார் என்ற விஜய், விக்னேஷ் என்ற அப்பு, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும், பிரபல தாதா நாகேந்திரன் மகனுமான அஸ்வத்தாமன், ராஜேஷ், செந்தில்குமார் மற்றும் கோபி ஆகிய 15 நபர்கள் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன் பெயரில் 15 நபர்களும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் கடந்த 7ஆம் தேதி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மொத்தம் 25 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக BSP குற்றச்சாட்டு.. ராகுலுக்கு கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details