சென்னை:சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் 8 பேர் சரணடைந்ததாகத் தகவல் வெளியானது. பின்னர் கைது எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
அவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட போது, திருவேங்கடம் என்ற நபரை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது என்கவுண்டர் செய்தனர். இதையடுத்து, மீதமுள்ள 10 நபர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு ரவுடிகள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிப் படுகொலை செய்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் இதில் தொடர்புடைய ஒவ்வொரு நபர்களையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தற்போது வரை மலர்கொடி, வழக்கறிஞர் ஹரிகரன், சதீஷ்குமார், வட சென்னை அஞ்சலை, வழக்கறிஞர் ஹரிதரன், அஸ்வத்தாமன் உள்ளிட்ட 22 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.