சிவகங்கை: ஆயுதப்படையில் முதல் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் சிவசங்கரன் (30). இவர் சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் சிவசங்கரன், காரைக்குடியில் வாக்குப்பெட்டி பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார்.
பின்னர், பணி முடித்து நேற்று காலை வீடு திரும்பி உள்ளார். இதனையடுத்து, நீண்ட நேரமாக இவர் வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டு, கதவை உடைத்துப் பார்த்துள்ளனர். அப்போது, சிவசங்கரன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டோங்கரே பிரவீன் உமேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சௌந்தர்யன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், இது தொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் லிங்க பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
இவ்வாறு போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த சிவசங்கரன், சிவகங்கை வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. மேலும், இவரது மனைவியான லட்சுமி பிரியா, தற்பொழுது மதுரையில் உள்ள அவரது தாயார் வீட்டில் வசித்து வருவதாகவும், சிவசங்கரன் குடும்ப பிரச்னையில் இருந்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:பைனான்சியரிடம் கடன் வாங்கிய நபரின் வீட்டில் கல்வீச்சு.. கரூரில் நடந்தது என்ன? - Stone Pelting At House