தேனி: விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் சின்னமனூர் நெல்பேட்டை பகுதியில் நேற்று (ஆக.17) இரவு காவல்துறையினரிடம் உறிய அனுமதி இன்றி கொடிக் கம்பம் நடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக நெல்பேட்டை பகுதிக்கு வருகை தந்து அந்த இடத்தில் கொடிக் கம்பம் நடக்கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தொண்டர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், கொடிக் கம்பத்தை அகற்ற முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, ஏராளமான கட்சி தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விடுதலைச் சிறுத்தை கட்சியின் தேனி மற்றும் திண்டுக்கல் மண்டல செயலாளரும், சுருளி மற்றும் தேனி மாவட்ட துணைச் செயலாளரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து காவல்துறையினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் நான்கு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், "கடந்த மூன்று ஆண்டுகளாக இங்குதான் கொடிக் கம்பம் இருந்து வருகிறது, தேர்தல் நன்னடத்தை விதிகளுக்காக கொடிக் கம்பம் அகற்றப்பட்டிருந்தது. ஆகவே, தற்பொழுது திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் அதே இடத்தில் கொடிக் கம்பம் நடப்பட்டது" என விடுதலை சிறுத்தை கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், காவல்துறையினரோ இங்கு கொடி கம்பங்கள் நடுவதற்கு உறிய அனுமதி பெறவேண்டும் என கூறி கொடிக் கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவுவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும், விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கொடிக் கம்பத்தை அகற்றக்கூடாது என்று காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.