தஞ்சாவூர்:தஞ்சை பெரியகோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோயில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் செயல்பட்டு வருகிறது. இக்கோயிலில் உள்ள 216 அடி விமான கோபுரத்தில் உள்ள கலசத்துக்கு அருகே இடிதாங்கியும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இடி தாங்கி உரிய முறையில் செயல்படுகிறதா என மாதம் ஒரு முறை, ஆண்டுக்கு ஒரு முறை, ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை என ஆய்வு செய்யப்படும். கோபுரத்தின் அருகில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கியின் மூலம் கட்டிடத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கப்படும்.
இந்த நிலையில் இடிதாங்கி உரிய சிரத்தன்மையுடன் உள்ளதா என ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்பு ஆய்வு இன்று (ஏப்ரல் 6) நடைபெற்றது. தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் அனில்குமார் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொல்லியல் துறை அலுவலர்கள் சங்கர் சீதாராமன் எலக்ட்ரிக் பிரிவைச் சேர்ந்த பிரசாத் கட்டுமான தொழிலைச் சேர்ந்த மதன்குமார் மற்றும் செந்தில்குமார் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.