வேலூர்:நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய பாமகவிற்கு 10 தொகுதிகளை ஒதுக்கியது, பாஜக. இதனையடுத்து, தன்னுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாமக. இதில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் வழக்கறிஞர் பாலு போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கட்சித் தலைமை அவரை வேட்பாளராக அறிவித்ததைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவை அவர் பெற்று வருகிறார். அதன்படி, வேலூர் மாவட்டம் காட்பாடி கரசமங்கலத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்குரைஞர் பாலு அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
பாமக கிழக்கு மாவட்டச் செயலாளர் இளவழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு பேசுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், இதுவரையில் மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் செய்யவில்லை.
நான் வெற்றி பெற்றால், நகரி திண்டிவனம் ரயில் பாதை பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். அரக்கோணத்தில் ரயில்கள் அனைத்தும் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுப்பேன். மக்களுக்கு ஜெகத்ரட்சகன் என்ன செய்தார் என்பதை பொது மேடையில் வாக்காளர்கள் முன்னிலையில் என்னுடன் விவாதிக்கத் தயாரா?” என பேசினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாமக வேட்பாளர் பாலு பேசுகையில், “அரக்கோணம் தொகுதியில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, மீண்டும் போட்டியிடக்கூடிய ஜெகத்ரட்சகன் மீது பொதுமக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள்.