சென்னை:சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அருள், திருவேங்கடம்ராமு கொலைக்கு சதி திட்டம் தீட்டிய முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, முன்னாள் அதிமுக நிர்வாகி மலர்கொடி தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஹரிகரன் உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதில் ரவுடி திருவேங்கடம் போலீசார் கஸ்டடியை எடுத்து விசாரணை மேற்கொண்ட போது போலீசாரை தாக்கி விட்டு ஓட முயற்சித்த போது ரவுடி திருவங்கடத்தை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய 6 செல்போன்கள் அதிமுக முன்னாள் நிர்வாகியும், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினருமான ஹரிதரனிடம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து, செம்பியம் தனிப்படை போலீசார் ஹரிதரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில் செல்போன்களை சேதப்படுத்தி வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து, நேற்று முன்தினம் வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில், மெரினா கடற்கரை மீட்புக் குழுவினர் தேடுதல் பணியைத் தொடங்கினர். முதல் நாள் நீரில் மூழ்கி தேடுதலில் ஈடுபட்டதில் 4 செல்போன்களின் பாகங்கள் மட்டும் தனித்தனியாகக் கிடைக்கப்பெற்றது.