திருச்சி:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில், அக்கட்சித் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சியில் நடைபெறவுள்ள கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்திலிருந்து வந்தார். அப்போது, விசிகவினர் பானையை கையில் ஏந்தி திருமாவளவனை வரவேற்றனர்.
பின்னர், திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிகளில் வேறு யாரும் பானை சின்னம் கேட்டு விண்ணப்பிக்காததால், விசிகவிற்கு பானை சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பானை சின்னம் கேட்டு ஒரு மாதங்களுக்கு முன்பே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். இருந்தாலும், சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சி நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்ற எண்ணத்தில் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை.