சென்னை: 18வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜீன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், 7 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணும் பணியானது நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.
தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி என மூன்று மிகப்பெரிய கூட்டணிகள் தமிழகத்தில் போட்டியிட்டன. நேற்று (ஏப்.4) வெளிவந்த முடிவின் படி, இந்தியா முழுவதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக பெரும்பான்மை பெற்று இருந்தாலும், தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையிலான கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.
இது தொடர்பாக தற்போது அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழக மக்கள் கொடுத்த தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ந்துள்ளது. இந்திய அளவில் பல இடங்களில் வெற்றி பெறுவோம் என நினைத்தோம், வெற்றி பெறவில்லை. வருகின்ற காலத்தில் களத்தைச் சரியாக புரிந்து கொள்வோம்" என தெரிவித்தார்.
அதிமுகவுடன் இணைந்து பாஜக போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற முடிந்து இருக்குமா?என்ற செய்தியாளர் கேள்விக்கு, "தோராயமாக தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியில் பாஜக - அதிமுக பெற்ற வாக்குகளை மொத்தமாக கூட்டிப் பார்த்தால் 31 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்று இருக்க முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இருந்திருந்தால் திமுக கூட்டணியை விட 30 அல்லது 31 இடங்களில் வாக்குகள் அதிகம் பெற்று இருப்போம் என்பது ஒரு பேச்சாக அமையாது.
தேர்தலுக்கு முன்பு தமிழக மக்களுக்கு மூன்று வாய்ப்பு இருந்தது. மக்கள் ஒவ்வொரு கூட்டணியைப் பார்த்துத் தான் வாக்குகள் அளிக்கின்றனர். வாக்கு அளித்த பிற அவர்களுடன் கூட்டணி வைத்து இருந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வி யுகத்தின் அடிப்படையிலான கேள்வி. இருவரும் இணைந்து இருந்தால் 30 அல்லது 31 தொகுதி வெற்றி பெற்று இருக்கலாம் என்பதைத் தாண்டி ஏதோ காரணத்திற்காகச் சேரவில்லை என்பது தான் உண்மை. மேலும், இது தான் மக்கள் மன்றத்திலிருந்தது". என தெரிவித்தார்.