சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் வழங்குவதற்கான மையம், கடந்த 2023-24 கல்வியாண்டில் தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து மோசடி செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.
அதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு அங்கீகாரம் பெற்றுள்ள கல்லூரியின் விவரங்கள் அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் வழங்கும் மையத்தினால் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 2023-24 கல்வியாண்டில் 91 பொறியியல் கல்லூரிகளில் 680 மேற்பட்ட ஆசிரியர்களை போலியாக கணக்கு காண்பித்துள்ளது தெரிய வந்தது. அதேபோல, 2024-25 கல்வி ஆண்டில் 124 பொறியியல் கல்லூரிகளில் 800-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் போலியாக கணக்கு காண்பித்தது தெரியவந்தது.
இந்த நிலையில், அறப்போர் இயக்கம் அங்கீகாரம் வழங்குவதில் போலி பேராசிரியர்கள் கணக்கு காண்பித்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் வேந்தர் என்ற முறையிலும் தமிழ்நாடு ஆளுநர் ரவி, ஒரு பேராசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரியில் ஒரே கல்வி ஆண்டில் பணிபுரிவதாக அங்கீகாரம் பெறுவதற்கு பெயர் அளித்திருந்தால் அதுபோன்ற கல்லூரிகள் மற்றும் பேராசிரியர் விவரங்களை கண்டுபிடித்து அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் 294 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் போலி பேராசிரியர்கள் கணக்கு காட்டியது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.