விழுப்புரம்:விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகிற 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, விக்கிரவாண்டி தொகுதியில் காணை காலனி கிராமத்தில் பிரச்சாரம் செய்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது. இந்த இட ஒதுக்கீடு 1994ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக 69 சதவீத இட ஒதுக்கீடை கொடுக்கக் கூடாது என்று 2007ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இன்னும் ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு வழக்கு 2012ஆம் ஆண்டு தொடரப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் உச்ச நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி உள்ளது. ஆனால், 2021ஆம் ஆண்டு தினேஷ் குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தொடுத்தார். அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மகாராஷ்டிராவில் தொடரபட்டுள்ள மராட்டா இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு முடிந்தவுடன், தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு வழக்கை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று தெரிவித்தனர்.
தற்போது மகாராஷ்டிராவின் மராட்டா இட ஒதுக்கீடு வழக்கு முடிந்துள்ள நிலையில், ஜூலை 8ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விடுமுறைக்குப் பிறகு 69 சதவீத இட ஒதுக்கீடு பிரச்னையை நிச்சயமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கையில் எடுப்பார்கள் என்பது தான் என்னுடைய பயம்.
அப்போது நீதிபதிகள் தமிழ்நாட்டில் 69 சதவீதம் அளவிற்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்களா என்ற ஒரு கேள்வியை எழுப்புவார்கள். அதற்கு தமிழ்நாடு அரசால் எந்த பதிலும் அளிக்க முடியாது. அப்போது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 69 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்யும் வாய்ப்பு உள்ளது. இது எவ்வளவு பெரிய அநீதி? அதாவது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியும் தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தயங்கிக் கொண்டிருக்கிறது.
ஏதோ இவர்கள் இந்த வன்னியர் உள் இடஒதுக்கீட்டிற்காக கேட்கிறார்கள் என நினைக்க வேண்டாம். இவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும், வன்னியர் உள் ஒதுக்கீடுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சமூக நீதி பேசுகின்ற திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உச்ச நீதிமன்றத்தில் நியாயப்படுத்தினால் தான், தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடரும். இல்லையேல், அதனை ரத்து செய்வார்கள். பலமுறை இதுகுறித்து நாங்கள் எச்சரித்தும் இவர்கள் காதில் வாங்குவதாக இல்லை. தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்துவிடும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது, எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. 1984ஆம் ஆண்டு அம்பா சங்கர் ஆணையம் வீடு வீடாகச் சென்று நடத்திய கணக்கெடுப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. 1984இல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினார்கள்.