திருச்சி: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவு தெரிவித்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில், டிடிவி தினகரன் பேசியதாவது, "பிரதமர் மோடி 3-ஆவது முறையாக வெற்றி பெற வேண்டும். நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இருக்கலாம் என்றார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் துணிச்சலாக சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், 1977ல் அருப்புக்கோட்டையில் எம்ஜிஆர் போட்டியிட்டு வெற்றி பெற்ற போது, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பாலுச்சாமியின் மகன்.
அதேபோல், மதுரையில் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம.சீனிவாசனை எதிர்த்து, அதிமுக சார்பில் போட்டியிடுபவர் மருத்துவர் சரவணன். 2014ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த நிலையில், இடைத்தேர்தல் வேட்பாளர் படிவத்தில் இருந்த கை ரேகையை, அவருடையது இல்லை, அவர் உயிருடன் இல்லை என்றும் கூறி வழக்கு தொடர்ந்தவர். தற்போது மதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.